Sunday, 15 June 2014

தமிழகத்தில் அடிமை முறை

          தமிழகத்தில் அடிமை முறை இருந்ததா?



அடிமை முறை என்பது தமிழர்களுக்கு சொந்தமான ஒன்றல்ல. அதனை அறிமுகப்படுத்தியது மொகலாய மன்னர்தான். இஸ்லாம் தான் இதற்கு வழிகாட்டி என்று முன்பு தங்கமணி என்னோடு வாதம் செய்தார். ஆனால் அவரது வாதம் தவறானது என்பதற்காகவும் முகமது நபி இஸ்லாத்தை அரேபிய மக்களிடம் போதிப்பதற்கு முன்பே தமிழகத்தில் அடிமை முறை இருந்துள்ளது என்பதை விளக்குவதற்காகவும் சில ஆதராரங்களை இந்த பதிவில் பதிகிறேன்.

"சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள்."

- http://ta.wikipedia.org/wiki/சோழர்காலச்_சமுதாயம்

“விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை. இன்று இங்கே (ஸ்ரீ அன்ஹில் பாட்டனில்) கடவுளுக் கொப்பான ஸ்ரீ பீம தேவரின் வெற்றி ராஜ்ஜியத்தில் அடிமைப் பெண் விற்பனைப் பத்திரம் இவ்வாறு எழுதப்படுகிறது.
“ராணா ஸ்ரீ பிரதாப் சிங்கால் கொண்டு வரப்பட்ட சிவப்பு நிறமான பதினாறு வயது நிரம்பிய ‘பனுதி’ என்னும் பெயருடைய அடிமைப் பெண், தலைமேல் புல்லை வைத்து, நகரத்தின் பஞ்சாயத்தார் அறியும்படி நாற்சந்தில் வைத்து விற்கப்பட்டாள். அவளை விலைக்கு வாங்கிய ஆஸ்தர் அடிமைப் பணியைச் செய்விப்பதற்காக ஸ்ரீ பிரதாப் சிங்குக்கு ஐந்நூற்றி நாலு பணங்கள் தந்து, நகர வாசிகளான நாலு வர்ண மக்களுக்கும் தெரியும்படி ‘பனுதி’ அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

“இதன் பின்னர் அவ்வடிமைப் பெண் மனது வைத்துச் செய்ய வேண்டிய வேலைகளாவன: அவளை விலைக்கு வாங்கிக் கொண்டவரின் வீட்டைக் கூட்டுவது, பெருக்குவது, தானியங்களைக் குத்துவது, மாவரைப்பது, சுள்ளி பொறுக்கி வருவது, தண்ணீர் காய்ச்சுவது, அசுத்தங்களைத் தூர எறிவது, ஆடு, மாடுகளைப் பால் கறப்பது, தயிர் கடைவது, வயலுக்கு மோர் கொண்டு செல்வது, பருத்திக் காட்டில் வேலை செய்வது, நூல் நூற்பது, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலியன. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைப் பெண்ணுக்கு வீட்டுச் சொந்தக்காரர் (எஜமான்) நாட்டையும், காலத்தையும் பொருத்தும், அவருடைய சொத்தின் அளவுப்படியும் உணவு, உடை வழங்க வேண்டும். அவள் எஜமானின் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவளுடைய தந்தையோ, சகோதரனோ, கணவனோ வந்து வேலைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டால், எஜமான் அவ்வடிமைப் பெண்ணை ஈவிரக்க மின்றிக் கட்டி வைத்து அடித்து விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்யும்படி செய்யலாம். பிறகு எஜமான் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து, காலால் உதைத்தும், தடியால் அடித்தும் அவள் இறந்துவிட்டால், எஜமான் குற்றவாளியல்ல; அவள் தன் தலையெழுத்தின் படி செத்தாள் என்பதை நான்கு வர்ண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தீட்டிலிருந்து புனிதர்களாக்கிக் கொள்வதற்காக எஜமான் தனது மனைவி, மக்களுடன் கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே போதுமானது. அந்த அடிமைப் பெண் குளம், குட்டையில் விழுந்தோ, விஷம் கலந்த உணவு சாப்பிட்டோ இறந்து விட்டால், அவளுடைய எஜமான் குற்றவாளியல்ல; அவள் தனது விதியின்படி செத்தாள் என்பதை ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

எஜமான் தன் குடும்பத்தாருடன் கங்கை நீராட வேண்டும். இதில் எழுதப் பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு நகரக்காவலர்களும், நகர வாசிகளும் சாட்சிகளாவர். இந்த விஷயமான ராணா பிரதாப்சிங்கும், நான்கு காவலர்களும் தமது கையால் எழுதியிருக்கின்றனர். இந்த விற்பனைப் பத்திரத்தை இரு தரப்பாரும் கேட்டதன் பேரில் ஜயதா பாரதியால் எழுதப்பட்டது.”
மேற்கண்ட விற்பனைப் பத்திரத்தில் அடிமை வழக்கத்தின் எவ்வளவு மோசமான உருவத்தைக் கண்டோம்! ஆனால், கரபாத்ரி சுவாமிஜி இதை எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார், பாருங்களேன்;

“அடிமை முறை யுகத்தில்கூட அடிமை வேலை செய்ய இயலாமல் ஆகி விட்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பையும் எஜமானரே ஏற்றுக் கொண்டார்.”

“உண்மையில் இவ்வடிமைகள் பெயரளவுக்குத் தான் அடிமைகளே தவிர, அவர்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். அதனால் தான் எஜமானர் அடிமைகளின் உணவு, உடை வசதியைக் கவனித்த பிறகே, தன் குடும்பத்தின் உணவு, உடை வசதியைக் கவனித்தார்.”

பழங்கால அடிமை முறை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இதை, கரபாத்ரியின் ‘ரிதம்பரா பிரக்ஞை’யும் அறியும் இருந்தாலும் முக்காலங்களையும் ‘அறிந்த’ ரிஷிகளின் சாஸ்திரங்களை ஆதரிப்பது அவருடைய ‘கடமை’யாதலால், அடிமை வழக்கத்தையும் ஆதரிக்கிறார் பாவம்!////

http://www.keetru.com/anaruna/aug07/ilavenil_2.php -

------------------------------------------------------------

ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய "தமிழகத்தில் அடிமை முறை" என்ற நூலிலிருந்து:

சங்க காலத்தில் அடிமை முறை என்ற பகுதியில் மருத நிலப்பகுதியில் அடிமைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் “சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரி பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது “கொண்டி மகளிர்” என்று இவர்களைப் ‘பட்டினப் பாலை’ ஆசிரியர் குறிப்பிடுகிறார். (22)

பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் (பக். 29) அடிமைத் தொழில் இழிவாக இக்காலகட்டத்தில் கருதப்பட்டதைப் பல சமய இலக்கியச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார்.

சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

(1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.

அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. (பக். 40).

இதன் நீட்சியாக மராட்டியர்கள் கால அடிமை முறையைக் காட்டுகிறார். இந்த அதிகாரத்தில் அடிமைகள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றியும் கூறுகிறார். இதற்கு முழு உதாரணமாக ‘ஒடைப்பிலே போடு’ என்ற சொல்லாக்கத்திற்கு ஒரு உதாரணம் காட்டுகிறார்.

“எப்பொழுதாவது ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்கு தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம் எனக் கருதி, அவற்றின் கோபத்தைத் தணிக்க ஓர் அடிமையை அந்த உடைப்பில் தள்ளி, அவர் மேல் மண்ணைப் போட்டு மூடி அவரைப் பலி கொடுத்து விடுவார்கள்..... இந்தப் பயங்கரமான பழக்கம் அவ்வளவு பரவலாக இருந்ததன் விளைவாக அது ஒரு பொதுவான பழமொழிக்கே வழிவகுத்தது! இவன் என்னத்துக்கு ஆவான்! ஒடைப்பிலே போட்டு மண்ணைச் சுமக்கவா?” என்று கூறுவர். அதாவது இவன் உடைப்பில் உயிருடன் போட்டுப் புதைப்பதற்கன்றி வேறெதற்கும் லாயக்கில்லை என்பதாகும்” (58/59).

தமிழகத்தில் அடிமை முறை:

அடிமை முறையின் ஒரு அருவருக்கத்தக்க அம்சம் தேவரடியார்கள் முறை. இது பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ந்ததென்று இவர்களுக்குச் சுயத்தன்மை உண்டு என்றாலும், இவர்களைக் கோயில்களுக்குத் தானமாக அளித்தனர். போரில் பிடித்த பெண்களைத் தேவரடியார்களாகத் தானமளிப்பது பெண்களை விலைக்கு வாங்கித் தானமாக அளித்தது இந்த இரு கூறுகளில் இதில் காணலாம். இவர்கள் தவறு செய்தால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் (61) ‘பொட்டுக்கட்டுதல்’ என்ற நிகழ்ச்சி வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் இருந்தது.

“பாலியல், பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொது மகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரை முறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது” (67) (இன்றைக்கும் கூட பெருமாள் கோயில்களில் பெருமாள் “தேவடியாக் குடிக்குச்” சென்று வருவது ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது).

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குடும்பத்துடன் அடிமையாக்கப்பட்ட கொத்தடிமைகள், பண்ணையடிமைகள், படியாள் என்ற முறையும், தஞ்சைப் பண்ணையாள் முறை என்பதும் வழக்கத்தில் இருந்தது. இந்தப் பண்ணையாள் முறையை ஒழிப்பதற்கு மணலி சி. கந்தசாமி தலைமையிலான போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார் (82)

“முழங்கால் வரை இருந்த சேலையை / கணுக்கால் வரை கழுத்து விட்டதாரு / மணலி கந்தசாமி என்று கூறு” (82) இவர்கள் தவிர ஆங்கில ஆட்சியில் மலைத்தோட்ட அடிமைகளும் உருவாயினர்.

இந்த நூலில் அவர் மிகக் கவனமாக அடிமைமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் இங்கு நிலவியது அடிமைச் சமுதாயம் அல்ல. அடிமை முறை மட்டுமே இருந்தது. இது மேற்கத்திய முறையில் இருந்து மாறுபட்டு இருந்தது. சமூக அமைப்பு புராதன இனக்குழு மக்கள் அமைப்பு, அடிமைச் சமுதாயம், நிலஉடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமூகம் என்றபடி மூளை வளர்ச்சி நம்மிடையே நேர்கோட்டுப் பாதையில் இடம் பெறவில்லை. ஆசிய உற்பத்தி முறை என்று மார்க்ஸ் அழைத்ததற்கு ஏற்ப இங்கு அவற்றில் ஒருவகைத் திணை மயக்கம் ஏற்பட்டு இருந்தது. இவற்றை கா. சிவத்தம்பி சமச்சீரற்ற வளர்ச்சி என்று அழைக்கிறார். சங்ககாலத்தில் ஐவகை நிலங்களில் அடிமைகள் மருத நிலத்தில் மட்டுமே இருந்தனர். சமுதாயமாக அல்ல ஏனென்றால் அடிமைகள் சமுதாயமாக இயங்குவதற்குரிய உபரி உற்பத்தி தமிழகத்தில் இல்லை. ஆனால் சோழர் காலத்தில் அடிமைகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இது பற்றி ஆசிரியர் கூறுகிறார்:

“நில உடைமைச் சமூக அமைப்பு சோழர் காலத்தில் நன்கு வேர்விட்டுத் தழைத்திருந்தது. அடிப்படை உற்பத்திச் சாதனமான நிலத்தின் மீது பிராமணர்களும் வேளாளர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுடன் கோயிலும் இணைந்து கொண்டது” (பக். 87) இங்குக் கோயில் என்பது தனி சக்தியாகக் காண்பதை விட பிராமணிய வேளாண் சமூகத்தின் ஒரு அடக்குமுறைச் சாதனமே என்றும், அது அந்த அமைப்பின் பிரதிபலிப்பு என்றும் காண்பது நல்லது. இதன் பின்னர் உருவாகும் கருத்தியலை ஆசிரியர் சரியாகவே விளக்குகிறார்.

“தமிழகத்தில் தோன்றிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அடிமைகளை உருவாக்க, பிராமணியம் அடிமைகளைத் தீண்டத் தகாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றியது எனலாம்” (பக். 8) இதன் விளைவாக “ஐரோப்பிய அடிமைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலும் தீண்டத் தகாதவர்களாக அவர்கள் நடத்தப்படவில்லை. “இந்திய அடிமை முறையானது ஐரோப்பிய அடிமைமுறையை விட மோசமாக இருந்தது (பக். 87). ஐரோப்பிய அடிமைகள் அறிவுசார்ந்த துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியாவில் அறிவு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஐரோப்பிய அடிமைகளை விட அதிக சுதந்திரம் உள்ளவர்கள் போல இந்திய அடிமைகள் தென்பட்டாலும், உண்மையில் ஐரோப்பிய அடிமைகளைவிட அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர். அடிமைகளின் பணியை மேற்பார்வையிட “ஊரில் உள்ள ‘சபா’ என்ற பிராமணரின் ஊராட்சி மன்றமும் ‘ஊர்’ என்ற ஏனையோரின் ஊராட்சி மன்றமும் ஏற்றுக் கொண்டிருந்தன” (பக் 95).

மேற்கண்ட ஆதாரங்கள் தமிழகத்தில் அடிமை முறை இருந்ததை பறை சாற்றுகின்றது. பிற் காலத்தில் மொகலாயர்கள் காலத்திலும் வெள்ளையர்கள் காலத்திலும் இந்த முறை படிப்படியாக குறைக்கப்பட்டு சுதந்திர இந்தியாவில் சட்டத்தின் மூலம் முற்றாக ஒழிக்கப்பட்டது. பிரிட்டிஷார் மதத்தின் பெயரால் விளைந்த அடிமை முறையை ஒழித்தாலும், நிர்வாகத்தை மேம்படுத்த அதே அடிமை முறையை பயன்படுத்தி மக்களை மலேசியா சிலோன் அந்தமான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததையும் நாம் மறந்து விட முடியாது. 'தேவரடியார்கள்' என்று பொட்டு கட்டி விடும் வழக்கம் மறைமுகமாக இன்னும் நடந்து கொண்டதான் இருக்கிறது. நேபாளத்தில் இது சட்டபூர்வமாக இன்றும் நடந்து வருகிறது. காரணம் அது ஒரு இந்து நாடு. தற்போது நரேந்திரமோடி தலைமையில் இந்துத்வா ஆட்சியை பிடித்துள்ளதால் ஒழிந்து போன அந்த முறை திரும்பவும் புதுப்பிக்கப்படலாம். அவ்வாறு சட்டமாக்கப்பட்டால் அதனை ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்க்க வேண்டும்.

No comments: